கோட்டாவிற்கு எதிரான வழக்குகளின் சூத்திரதாரிகள் இவர்களே! புலனாய்வுத் தகவல் வெளியிட்ட வீரவன்ச!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையுமே மேற்கொண்டிருப்பதாக மஹிந்த – கோட்டா விசுவாசியும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் வீரவன்ச சூளுரைத்திருக்கின்றார்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஏப்ரல் ஏழாம் திகதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றமொன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பிலான அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டன.

கொழும்பு ரத்மலானை பகுதியில் வைத்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை பதிவுசெய்திருந்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்த TID என்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2007 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை தடுத்துவைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி கனேடிய பிரஜையான ஈழத்தமிழர் ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் உலகின் முன்னணி சட்ட நிறுவனமான ஹவுஸ்பெல்ட் சர்வதேச சட்ட நிறுவனமும், ITJP என்ற சிறிலங்காவின் நீதிக்கும், உண்மைக்குமான செயற்திட்டமும் இணைந்து இந்த வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் மஹிந்த – கோட்டா விசுவாசிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது தோல்வியைத் தழுவிய இந்தத் தரப்பினர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் தோற்கடிப்பதாக சூளுரைத்துவந்த நிலையில் ஏப்ரல் ஐந்தாம் திகதி படுதோல்வியை சந்தித்தனர்.

இந்த நிலையிலேயே கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கை பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் தீவிர முயற்சியில் மஹிந்த – கோட்டா தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

இதற்கமைய கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மஹிந்த – கோட்டா விசுவாசியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னணி தொடர்பில் அவரது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் வீரவன்ச தெரிவித்திருந்ததாவது,

‘அமைச்சர் மலிக் சமரவீரவின் வீட்டில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகமொன்றின் ஊடகவியலாளர் ஆகியோர் சந்தித்து அண்மையில் கலந்துரையாடியிருக்கின்றனர். இவர்களில் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்துடன் மங்கள சமரவீர நெருக்கமாக செயற்படுபவர். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கு கோட்டாபய செயற்பட்டதை அடுத்து அந்த தரப்பினருடன் இணைந்து வழக்கு தொடர்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான தொடர்பாடல் சேவைகளை அமைச்சர் சாகல ரத்நாயக்கவும், இஷினி விக்ரமசிங்கவும் அலரிமாளிகையிலிருந்து மேற்கொண்டனர். பிரதமர் ரணிலுக்கு முதுகில் குத்திவிட்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கிய பின் பிரதமராகும் நோக்கம் மங்கள சமரவீரவுக்கு உள்ளதனால் தனிப்பட்ட ரீதியில் கோட்டாபய விவகாரத்தில் தலையீடு செய்து வழக்கு தொடர்வதற்கான உதவிகளை செய்திருக்கின்றார்.

இப்போது கோட்டாபய வேண்டாம் என்று கூறுபவர்களை விடவும் அவர் வேண்டும் என்கிற பிரிவினரே அதிகரித்து வருகின்றனர். எவ்வகையான வழக்குகளை யார் மேற்கொண்டாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே என பலரும் கூறியிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக ஏன் வழக்கு தொடரவில்லை என்று லசந்தவின் புதல்வியான அகிம்சா விக்கிரமதுங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வினவினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் விசேட இராணுவப்படையிலிருப்பதாக அப்போதைய எதிர்கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் வைத்து கூறியிருந்தார். அதனை நாங்கள் சொல்லவில்லை. அதேபோல சரத் பொன்சேகாவின் குழுவொன்றே லசந்தவை படுகொலை செய்ததாக அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள பாலித்த தேவரப்பெருமவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

லசந்தவின் படுகொலைக்கு சரத் பொன்சேகாதான் காரணம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அதேபோல பாலித்த தேவரப்பெருமவும் கூறும்போது அவருக்கு எதிராக வழக்கு தொடராமல் மௌனமாக இருந்த லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி 10 வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்காக அனைத்து விண்ணப்பங்களையும் வழங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது தந்தையின் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது ஸ்ரீலங்காவில் வழக்கு தொடர்வதற்காக லசந்தவின் புதல்விக்கு கடந்த 10 வருடங்கள் தாராளமாக காலம் இருந்தது. இதுகுறித்து அரச தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு சந்தேக நபராகவும்கூட கோட்டாபய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்கக் குடியுரிமையை கோட்டாபய இரத்து செய்யும்போதுதான் தனது தந்தையின் படுகொலை நினைவு லசந்தவின் புதல்விக்கு வருகிறது. அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்யும்போதுதான் புலம்பெயர் சமூகத்திற்கு இழந்த உறவுகளின் நினைவு வருகிறது. சிலவேளைகளில் அவர் விண்ணப்பங்களை வழங்கியிருக்காவிட்டால் இந்த இருதரப்பினருக்கும் நினைவுகள் வந்திருக்காது.

பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்கு முன்வந்ததன் ஊடாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்பதை அந்த தரப்பினர் அறிந்துகொண்டார்கள் எனவே அதனை தடுப்பதற்காகவே இவ்வாறான வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.