கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தின் யோசனைக்கு எதிராக மீண்டும் ஐ.தே.க விடுத்துள்ள அறிவிப்பு!

கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.

தற்போது அரச தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் போதுமானதாக இருக்கின்ற போதிலும் தேவையற்ற வகையிலேயே அதிகாரங்களை அரச தலைவர் கோரி வருவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்டார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனநாயகம் என்பது மூன்று பிரதான தூண்களால் உள்ளது. நிறைவேற்று, அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றினால் இது தாங்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுயாதீன ஊடகங்கள் என்பதுவும் அதில் நான்காவது தூணாகும். இந்நிலையில் 20ஆவது திருத்த யோசனையின் ஊடாக இந்த மூன்று தூண்களையும், நிறைவேற்றதிகாரத்தில் அடக்குவதற்கான முயற்சியே இடம்பெற்று வருகின்றது.

மக்களின் உரிமைகள் அரசியலமைப்பினால் பாதுகாக்கப்படுகிறது. அந்த விடயம் இல்லாமல் போகின்றது என்று கூறினால் அதற்கெதிராக ஐக்கிய தேசியக் கட்சி குரல்கொடுக்கும். நாங்கள் வரலாற்றில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வந்தவர்கள். அதேபோல பிரித்தானிய ஆட்சிக்காலத்திலும் கூட எதிர்த்து போராடிய மக்கள் நாங்கள்.

மக்களுக்கும், நாட்டிற்கும் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். அரச நிறுவனங்களின் சொத்துக்கள், நிதி பயன்பாடு குறித்து கணக்காய்வு செய்வதற்காக கணக்காய்வு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமும் தற்போது நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களும் நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். அதனால் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரச தலைவர் அளவுக்கு மிஞ்சிய அதிகாரங்களைக் கேட்கின்றார்.

ஆனாலும் கடந்த கொரோனா தொற்று சவால் ஏற்பட்டபோது இருக்கின்ற அதிகாரங்களை வைத்தே அவற்றைக் கட்டுப்பத்த அவர் நடவடிக்கை எடுத்ததை கண்டோம். இந்த நிலையில் மேலதிக அதிகாரங்கள் அரச தலைவருக்கு அவசியம் என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.