கோட்டாபயவிற்கு அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து மஹிந்தவின் இல்லத்தில் விசேட சந்திப்பு

19 ஆவது திருத்தம் ஊடக பறிக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முகமாக விஜயதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் சட்டமூலம் தொடர்பாக பொதுஜன பெரமுன ஆராய்ந்துள்ளது.

அந்தவகையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இருப்பினும் இதன்போது எட்டப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சையோ அல்லது அவர் விரும்பும் வேறு எந்த அமைச்சியோ தனக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இந்த திருத்தத்தை சமர்ப்பிக்க தீர்மானித்தார்.

மேலும் 19 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அரசியலமைப்பு சபையை புறக்கணிப்பது உட்பட பல அதிகாரங்களை திருப்பித் கொடுப்பது என்பது இந்த சட்ட திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன்பிரகாரம் விஜயதாச ராஜபக்ஷ இந்த திருத்த சட்டத்தை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு அவரினால் முன்வைக்கப்பட்ட இந்த திருத்தமானது அரசியலமைப்பின் 43 வது பிரிவை திருத்துவதற்கு எதிர்பார்க்கிறது. அரசியலமைப்பின் 22 வது திருத்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் ஏற்கனவே வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.