கோட்டாபயவின் ஜனநாயக கட்டமைப்பை மீறிய செயற்பாடு ஏற்படுத்தப்போகும் பாராதூர விளைவு!

கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் அமெரிக்காவுடனான மில்லேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதாக ஜே.வி.பி ஆருடம் வெளியிட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்பது தெளிவாகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை என்பதை அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது. குறிப்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன இதனை திட்டவட்டமாக அறிவித்தார்.

இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையுடன் எம்.சி.சி ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கைச்சாத்திடும் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி போன்ற அரச நிறுவனங்களுடைய செயற்பாடுகளில் உத்தியோகபூர்வமாக தலையிடுவதை விடுத்து முறையற்ற விதத்தில் செயற்பட்டு ஜனாதிபதி தன்னுடைய பொறுப்புக்களை உணராதவராகின்றார். அத்தோடு தனது தனிப்பட்ட கருத்துக்கு பணிபுரிய வேண்டும் என்ற வழிமுறையானது ஜனநாயகம் உள்ள நாட்டிற்கு பாரிய நெருக்கடியாக அமையும்.

ஜனநாயக அமைப்புக்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளை சரி செய்வது நாடாளுமன்றத்தின் கடமையாகும். எனினும் அவ்வாறான குறைபாடுகளை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஜனநாயக அமைப்பின் கட்டமைப்பிற்கு வெளியில் சென்று செயற்படுவது பாரதூரமானதொன்றாகும். உதாரணமாக விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி செயலணிகள் நாட்டில் காணப்படும் ஜனநாயக கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதாகும். பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி அதிகாரிகள் மீது அந்த சுமையை திணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சிறந்த முடிவு கிடைக்கும் என்று அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தம் பாரதூரமானதொன்று தான். எனினும் ஜனாதிபதித் தேர்தலின் போது அதனை மேலும் மிகைப்படுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்பது தெளிவாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.