கொழும்பை குடிசை வீடுகள் இல்லாத மாநகராக மாற்றுவதே திட்டம் – பிரதமர் மஹிந்த

கொழும்பை குடிசை வீடுகள் இல்லாத மாநகராக மாற்றுவதே எதிர்வரும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருது தெரிவித்த அவர், குறைந்த வருமானம் உடையவர்களை முறையான வீட்டுத் திட்டங்களில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தை முன்னெடுப்பதில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்தபோது, குடிசைகளை அகற்றி வீட்டு வளாகங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே தம்முடைய எதிர்கால அரசாங்கம் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்களை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகரத் திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்ட மற்றொரு திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துறைமுக நகரத்தின் கட்டுமானம் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்திருந்தால், எதிர்காலத் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பெரும்பாலான திட்டங்களை இப்போதே முடித்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.