கொழும்பு அரசியலில் பரபரப்பு – தனித்து ஆட்சியமைக்கத் தயாராகும் ஐதேக

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்த அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.

அதேவேளை, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

ஐதேக அரசாங்கத்தை அமைப்பது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் ஐதேக அரசாங்கத்தை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாக பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, ஐதேக அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 அமைச்சர்கள், ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும், திட்டமிட்டுள்ளனர். இன்னும் சிலர் கூட்டு எதிரணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக ஆட்சியமைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினரே அதற்கு ஆதரவளிப்பார்கள் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களே குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இணக்கம் இல்லை – சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் செயலக ஊடகப்பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தோ, உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகங்கள் குறித்தோ, சிறிலங்கா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகைய இணப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.

சுதந்திரமாக செயற்பட மைத்திரிக்கு ஆலோசனை

இதனிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி, சுதந்திரமான ஒருவராக செயற்படும் படி அவரது ஆலோசகர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூத்த தலைவர் ஒருவரை நியமித்து விட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY