கொலை குற்றச்சாட்டு தொடர்பான உண்மை நிலையை பகிரங்கப்படுத்த வேண்டும் – ஈ.பி.டி.பி.

கொலை குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஆட்சிக்காலங்களில் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த அரசாங்கம் உட்பட எமது கட்சி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

குறிப்பாக கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 மாணவர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் போன்றவர்கள் கொலைசெய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தற்போது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளன.

அதேபோன்று ஏனைய கொலைகளையும் விசாரித்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.