கொரோனா அச்சம் – பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

கொரோனா நோயை காரணம் காட்டி பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் கட்சி பல்வேறு பிரிவுகளாக பிளவு பட்டுள்ளன. இவ்வாறான கட்சிகளுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேவை இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இவ்வாறானோரே வதந்திகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தல் நடத்துவது தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலேயே ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார்.