கைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு

Jail+Bars11இலங்கை சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், சட்டம், ஒழுங்குகள் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்,சட்டமா அதிபர் யுவஞ்சன வனசுந்தர, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில்;

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் தீவிரமாக பிரதமர் தலைமையில் ஆராயப்பட்டது. நாம் ஒவ்வொருவரும் எமது கருத்துக்கள், வலியுறுத்தல்களை முன்வைத்தோம்.

சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியாத காரணத்தால் உடனடியாக அவர்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டது.

கைதிகளின் விபரம் நாளை ( இன்று) செவ்வாய்க்கிழமை முழுமையாக கிடைத்துவிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கைதிகளின் விபரங்கள் கிடைத்தவுடன் அவர்கள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் கூறினார் என்றார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறை அதிகாரிகளால் உடனடியாக பூரணப்படுத்தி தருமாறு கோரி விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டு அது உடனடியாக பெறப்பட்டுள்ளது.

அவ் விண்ணப்பப்படிவத்தில் எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?, எங்கே வைத்து ? என்ன காரணம் ? வழக்கு விசாரணையில் இருக்கின்றதா? முடிந்து விட்டதா? வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? புனர்வாழ்வுக்கு உட்பட விருப்பமா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1 COMMENT

  1. ‘சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியாத காரணத்தால் உடனடியாக அவர்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டது.’

    கேழ்வரகிலை நெய் வடியுது என்கிறாரோ ?

LEAVE A REPLY