கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போகவில்லை: தலதா அத்துகோரள

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போனதாக வெளியான செய்தியை சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் “போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போனமை உண்மையானதா? ஜனாதிபதி இவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு கூறியும் ஏன் அதனை செயற்படுத்த தாமதம் காட்டுகின்றீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்தபோதே தலதா அத்துகோரள மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், “மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான எந்தவித கோவைகளும் காணாமல் போகவில்லை. அது தொடர்பில் நாம் ஜனாதிபதியை தெளிவுபடுத்தியுள்ளோம்.

தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 376 கைதிகள் உள்ளனர், அதேபோல் 873 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர். மொத்தமாக ஆயிரத்து 249 கைதிகள் உள்ளனர்.

இவர்களில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 48 பேருக்கு மாத்திரமே மரண தண்டணை வழங்க முடியும். அவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.

ஆகவே எஞ்சியுள்ள 18 பேருக்கு மாத்திரமே மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.