கூட்டமைப்பை வலுவிழக்க செய்ய வேண்டிய தேவைப்பாடு எமக்கு இல்லை – வேலுக்குமார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவிழக்க செய்ய வேண்டிய தேவைப்பாடு தமது கட்சிக்கு இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவிழக்க செய்வதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் முன்னெடுத்து வருவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களின் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் குரல்கொடுப்பதே ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்ளையாகும். அதனையும் தாண்டி இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் எமது கட்சியின் அதேபோன்று எமது கட்சியின் தலைவரான மனோ கணேசனின் அமைச்சினது செயற்பாடுகள் நாடு முழுவதும் பரவலாக முன்னெடுக்கப்பட்டது, முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிலும் நல்லிணக்க அமைச்சு என்ற ஒரு பிரிவு தனித்து வடக்கு கிழக்கிலே மட்டும் செயற்படுவதற்கான ஒரு அமைச்சாகும். இந்த அமைச்சின் பொறுப்பானது எமது கட்சியின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அமைச்சின் ஊடாக பணிகளை முன்னெடுக்கின்ற போது, சிலர் நினைத்துக்கொண்ட நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுகின்றோம் என்று.

எனினும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெறுவாரியான நிதி தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்ற வடக்கு கிழக்கிலே இருக்கக்கூடிய அந்த உறுப்பினர்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்கு அமையவே நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம்.

அதனடிப்படையிலேயே எங்களுக்கு மிகுந்த நல்லுறவு தமிழ் தேசியகூட்டமைப்போடு காணப்படுகின்றது. எந்த ஒரு அமைப்பையுடன் முறையற்ற விதத்திலேயே வலுவிழக்க செய்யவேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு இல்லை.

ஆனால் நாங்கள் எங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே நாங்கள் எங்களை வலுப்படுத்திக்கொள்வதற்காக பல்வேறு மட்டங்களிலும் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.