கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டது: தவராசா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைத்த பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டதாக வட.மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல் அரசியலமைப்பு வரைவு வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனவே இது தொடர்பாக நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும்.

கூட்டமைப்பு தமது பேரம்பேசும் சக்தியை இரண்டு தடைவைகள் வீணடித்துவிட்டது. அதாவது ஒன்று ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட விடயத்தில் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தது.

மற்றைய விடயம் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கூட்டமைப்பு தமது ஆதரவினை வழங்கியமை.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பேரம் பேசும் பலத்தினைக் கொண்டிருந்தும் அதனை வீணடித்து விட்டார்கள்.

இவர்களின் செயற்பாட்டினை எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணிப்பிரச்சினை, போன்ற எமது பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன.

ஆனால் இவை அனைத்தையுமே புறந்தள்ளி கூட்டமைப்பு எந்த அடிப்படையில் தமது ஆதரவினை வழங்கினர் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது” என சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.