கூட்டமைப்பு ஒருபோதும் ஸ்ரீலங்கா அரசிற்கு மக்களை அடைமானம் வைத்து செயற்படாது!

கூட்டமைப்பு ஒருபோதும் ஸ்ரீலங்கா அரசிற்கு துணைபோகாது மக்களை அடைமானம் வைத்து செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தமிழ்மக்களின் எந்த நோகத்திற்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்த நோக்கத்திற்காக ஆயுதங்கள் இல்லா நிலையிலும் அரசியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த அரசிற்கு சோரம்போய் தனது சுயநலன்களை கருத்தில் கொண்டு செயற்பட்டார்கள் என்ற விமர்சனத்தினை இன்று தமிழ் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு நிற்பவர்கள் பிரச்சாரத்தினை செய்வது மிக கவலை தருகின்றது. கூட்டமைப்பு ஒருக்காலும் ஸ்ரீலங்கா அரசிற்கு துணைபோகாது மக்களை அடைமானம் வைத்து செயற்படாது.

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் மீறப்படும் போது அதனை மீண்ட்டுக் கொண்ட பெருமை எங்கள் தமிழ்மக்களை சார்ந்தது முக்கிய விடையங்களில் தமிழ்மகளுடைய பங்களிப்பு மக்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு தமிழர்களின் பெருமையினை பறைசாற்றும் வகையில் இருந்துள்ளது.

மக்களின் உணர்வுகளை நாங்கள் அடைமானம் வைத்து செயற்படவில்லை என்பதை தெரிவித்து நிக்கின்றேன்.

கடந்த காலங்களில் வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெறவில்லை, மக்கள் சுதந்திராமக எங்கும் நடமாடகூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று வடக்கு கிழக்கு மக்களை பேருந்தில் இருந்து இறக்கி பரிசோதனை செய்கின்ற அவல நிலை அன்று இருக்கவில்லை.

காணாமல் போனவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை கொண்டு போராடுகின்ற போது அரச படையினரின் கெடுபிடிகள் இருக்கவில்லை, மாவீரர் துயிலும் இல்லத்தில் எங்கள் வீரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது எந்த தடையும் இருக்கவில்லை.

இன்று சர்வதேசத்திடம் நாங்கள் நியாயம் கேட்கமுடியும் இந்த நாட்டில் நாங்கள் பிரிந்து போவதா என்று சர்வதேசத்திடம் நியாயம் கேட்கின்ற வலுவினை எங்கள் தமிழ்தேசம் பெற்றுள்ளது. அதுதான் எங்களின் கடமையாக இருந்தது.

இந்த அரசின் அடிவருடிகளாக நாங்கள் செயற்படவில்லை இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முள்ளிவாய்க்காலில் எங்கள் மக்களை அழித்த விடையங்கள் எங்கள் மனங்களில் இருந்து விடுபடவில்லை.

இன்று நிலமை மாறி பரிசோதனைக் கூடங்கள், திணைக்களங்களில் படையினரின் தலையீடுகள், எந்தஒரு விடையம் செய்தாலும் படையினரின் அனுமதி பெறவேண்டும் என்று அடுக்கி கொண்டு போகலாம் தற்போது உள்ள ஜனாதிபதியும் பிரதமரையும் கொண்ட அரசு.

எங்கள் மக்கள் இனவாதிகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்ற வகையில் சஜித்திற்கு வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு வாக்களித்தார்கள்.

அவர் ஒரு வகையில் தோற்றது நல்லம் றிசாட்பதியூதீன் போன்றவர்களின் ஆட்டம் நிறுத்தப்டப்டுள்ளது.

இன்று புதிய ஜனாதிபதி இனவாதத்தினை கக்குகின்ற பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கின்றார். சிங்கள மக்களின் ஆணையினை பெற்றுள்ளேன். அவர்களுக்காகத்தான் சேவை செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நாட்டில் ஏனைய தேசிய இனம் இல்லையா என்று எங்கள் மக்கள் சார்பாக நாங்கள் ஜனாதிபதியினை கேட்கின்றோம்.

மனிதஉரிமை மீறல் நடந்துள்ளது என ஐ.நா சபையில் ஒத்துக் கொண்டு எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியை அரசு விசாரணை செய்வதாக ஒத்துக்கொண்டு ஏமாற்றினார்கள்.

ஆனால் இன்றைய புதிய அரசு ஐ.நா சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொல்கின்றது. அதற்கான பதிலை இந்த புதிய அரசு சொல்லியாக வேண்டும் சர்வதேசத்தினையும் ஐ.நா சபையினையும் ஒருநாளும் ஏமாற்ற முடியாது காரணம் எங்கள் நாடு தன்னிறைவடைகின்ற நாடாக இல்லை, கையேந்துகின்ற நாடாகத்தான் இருக்கின்றது. இதன் காரணமாக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்ற வாய்ப்புக்கள் இந்த அரசிற்கு வரும்.

எங்கள் காணமல் போன மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் இவற்றுக்கு சாட்சி சொல்கின்றார்கள் ஜனாதிபதியும், அமைச்சரும் ஆனால் எந்த இடம் என்று மறுக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் தெரிவிக்கும் சாட்சி கருத்துக்கள் ஐ.நா சபையில் எங்களுக்கு பலமானவிடையமாக மாறுகின்றது.

இன்று தென்னிலங்கை சிங்கள கட்சிகளின் பிரநிதிதிகள் வடக்கு கிழக்கில் கால் ஊன்றுகின்ற நிலை இன்று தமிழர்கள் பூர்வீக குடிகள் என்கின்ற நிலமையாக மாற்றப்படுகின்ற அபாயம் காத்திருக்கின்றது. இந்த அபாயத்தினை புதிதாக கட்சி தோற்றியவர்கள் உணரவில்லை.

புதிய அரசுடன் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆமா போடுகின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு அமைச்சர் சொன்னார் செக்பொயின்ற் எங்கே இருக்கின்றது நான் கண்ணை மூடிவிட்டா பயணம் செய்கின்றேன் என்று கேட்டார் அதற்கு பிரதமர் தான் பதில் சொல்லவேண்டும்.

எல்லையில் மகாவலி அபிவிருத்தி என்ற திட்டத்தின் ஊடாக காணிகள் அபகரிப்பு நடந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் போராடி அதனை நிறுத்தி வைக்கின்ற நிலை இப்பொழுது காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பச்சைப் பொய்யினை சொல்கின்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும் முதுகெலும்பு இல்லாத தலைமைகளை நம்ப வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளளார்.