கூட்டமைப்பு, ஐ.தே.மு.க்கு ஆதரவு வழங்கிய பின்னையிலேயே மட்டக்களப்பு படுகொலை இடம்பெற்றுள்ளது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்த பின்னணியில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், இன்றைய நாட்டு நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் சாதாரண வாழ்க்கையை கண்காணிக்கும் வகையிலும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் குறித்த கொலை சம்பவம் கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என தெரிவித்த அவர், இதனுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை நீதியான விசாரணைகளை மேற்கொண்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.