கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்: சுசில் பிரேமஜயந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து பயணிக்கத் தமது தரப்பு தயராகவே இருக்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒன்றிணைந்து செயற்பட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் இணைந்து பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

சாதாரண மக்களின் தேவைக்காகவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவர், மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரது காலத்தில் தான் வடக்கு மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 1987 ஆம் ஆண்டுமுதல் இருந்தாலும், வடக்கு தேர்தலை நடத்த முடியாமல் தான் காணப்பட்டது” என சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.