கூட்டமைப்புக்கு கடும் அழுத்தம்! – சஜித்தை பணியவைக்க தலைவர்கள் முயற்சி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து ஒரு எழுத்துப்பூர்வமான உடன்பாட்டைக் கோருவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் எதிர்வரும் நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலில் தங்கள் ஆதரவைப் பெற எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிடமிருந்து அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடிவு செய்யும் எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர்.

குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைக் கொண்டுவரும் புதிய அரசியலமைப்பிற்கு சஜித் எழுத்துமூலம் உறுதி வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பினர் உள்ளனர். ஏனெனில் கடந்த தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளமையே காரணம்.

இந்த விடயங்கள் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “தமிழர்கள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றினை ஜனாதிபதி வேட்பாளர்கள் தீர்ப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.

மேலும் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் கட்சி சார்பாக இதுவரை எவருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

அத்தோடு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேட்பாளர்களிடமிருந்து கிடைக்கும் திட்டங்களை பரிசீலித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்திய பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை எடுக்கும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை தொடர வேண்டும் என கூட்டமைப்பு கோரியிருந்தது. அதற்கு எழுத்து மூலமான உத்தரவாதத்தையும் கோரியதாக தெரிகிறது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு எழுத்து வடிவத்தில் உறுதி வழங்குவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற யதார்த்ததை ஆழமாக சிந்திப்பதாக தெரிகிறது.

இந்த யதார்த்தம் கூட்டமைப்புக்கு தெரியாத விடயம் அல்ல. எனினும், 2015 இல் கிடைத்த அனுபவம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அந்த தாக்கத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியில் கொண்டு வந்து தொடர்ந்தும் அவர்களை தங்களின் வாக்கு வங்கியாக நிலை நிறுத்துவதற்கு கூட்டமைப்புக்கு எதாவது எழுத்து ஓலை ஒன்று அவசியமாக இருக்கின்றது.

எனவேதான், கூட்டமைப்பு தலைவர்கள் கடந்த காலங்களைப் போன்று நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவு வழங்குகின்றோம் என்று சுருதியை கொஞ்சம் மாற்றியிருக்கின்றார்கள்.

இந்த கூட்டமைப்பின் தர்மசங்கடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் நன்றாக உணருவதாகவே தெரிகின்றது. தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ற விடயத்தை பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுதியளித்துள்ளது. அதுமாத்திரமன்றி, அண்மையில் நடைபெற்ற தங்களுடைய தேசிய சம்மேளனத்தின் தீர்மானத்திலும் அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை தொட்டு காட்டியிருக்கின்றது.

எனினும், அதிகாரப் பகிர்வு என்பது எப்படியானதாக இருக்கும் என்பது தொடர்பாக ஆழமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆழமாக ஏதோவொரு தரப்பை எரிச்சலடைய வைக்கும் என்பதைவிட, தமது உண்மையான நிலைப்பாட்டை சொன்னால் தமிழ் மக்களை எரிச்சலடைய வைக்கும் – அது கூட்டமைப்பிற்கு அசௌகரியமாக இருக்கும் என்பது ஐதேக இற்கு தெரியும்.

எனவே, சஜித் தரப்பினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே நடக்கவிருக்கின்ற அடுத்த கட்டப் பேச்சுக்களில் தென்னிலங்கையும் – வடக்கு கிழக்கும் அதிருப்தியடையாத வகையில் தேர்தல் நகர்வுகளை எப்படி சஜித் தரப்பு நகர்த்த வேண்டும் என்பதே பேசு பொருளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் கடந்த காலங்களைப் போன்று கூட்டமைப்பு தலைவர்கள் தலையை அசைத்து விட்டு வெறுங்கையோடு வரமாட்டார்கள் என்பதை ஊகிக்க கூடியதாக இருக்கின்றது. எனெனில், இதில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது கூட்டமைப்பின் மனதில் ஆழமான நெருடலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.