கூட்டமைப்பில் களமிறங்குகின்றாரா அம்பிகா? அவரே வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்திகள் உண்மையில்லை எனவும் அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அம்பிகா சற்குணநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆணையாளராக இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பததிலும் அதனை ஊக்குவிப்பதிலும் ஒரு பங்கை கொண்டிருக்குப்பதற்கான வாய்ப்பை பெற்றது ஒரு பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இராஜினாமா குறித்து ஊடகங்களில் ஆதாரமற்ற ஊகங்கள் மற்றும் வேண்டும் என்றே திணிக்கப்பட்ட தவறான தகவல்கள் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜினாமா செய்வது குறித்து கடந்த 6 மாதங்களாக தீர்மானித்து வந்ததாகவும் அதன்பிரகாரமே தான் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலில் போட்டியிடுமாறு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு கிடைத்தது என சுட்டிக்காட்டிய அவர் இருப்பினும் தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தனது பங்களிப்பு இந்த நாட்டுக்கு தொடர்ந்தும் இருக்கும் என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை கொழும்பிலுள்ள ஐ.நா.மனித உரிமைகளுக்கான தூதுவரின் அலுவலகத்தில் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றிய அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் தொடர்பாக போதிய அனுபவமிக்கவர்கள் இலங்கையின் நீதித்துறையில் இல்லை என்றும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியுமென அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.