கூட்டமைப்பிலிருந்து எமது கட்சி விலகாது – சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகாதென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, கூட்டமைப்பில் இருந்து புளொட் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது தலைமையிலான கூட்டமைப்பின் குழுவை கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்க அழைத்திருந்தார்.

இதன்போது, அவர் தாம் ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார்.

தென்பகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் தன்னால் வெற்றிபெற முடியும் என்றும் எல்லா மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருக்கவே தாம் விரும்புவதாகவும் அதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை எனவும் கோட்டாபய கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்று அவர் கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாரை நிறுத்தப்போகிறார் என பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனை பொறுத்து முடிவெடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.