கூட்டமைப்பிற்கே முழு ஆதரவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் தமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது பூரணமான ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,

எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக போராளிகள் கட்சி தமது ஆதரவை எமக்கு வழங்க உள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகும் நாம் இணைந்து செயற்பட இருக்கின்றோம்.

மக்களுடைய தீர்வுக்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக நாம் திறந்த மனதுடன் பேச உள்ளோம். அவர்கள் எமது போராளிகள் என்பதன் அடிப்படையில் நாம் அவர்களை வரவேற்கின்றோம்.

ஒருமித்த, பிரிவு படாத நாட்டுக்குள் எமது மக்கள் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.