கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிக்கான சலுகைகளை வழங்கக்கூடாது: உதய கம்மன்பில

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிக்கான சலுகைகளை வழங்கக்கூடாது என அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு எதிராக வாக்களித்தமை என பல்வேறு சாதனைகளை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு செய்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, அமைச்சரவையின் முடிவுகளைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசித்துதான் அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறியிருந்தார்.

மேலும் சுமந்திரனோ, வடக்கு அபிவிருத்தி அமைச்சை தமது வேண்டுகோளுக்கு இணங்கவே ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டார் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் இந்த அரசின் பங்காளியாகவே கருத வேண்டும். இப்படியானவர்களுக்கு இனியும் எதிர்க்கட்சியில் இருக்க தகுதியில்லை.

இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு கட்சி இருந்ததில்லை. எனவே, நாடாளுமன்றத்தின்போது எதிர்க்கட்சி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும், எதிர்க்கட்சியாக விவாதத்தில் உரையாற்றவும் நாம் இந்தக் கட்சிக்கு இனியும் இடமளிக்கப்போவதில்லை.

அடுத்த அமர்விற்கு முன்னர் இதுதொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசின் பங்காளியாக அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.