கூட்டணி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் ஐ.தே.க.பேச்சுவார்த்தை!

கூட்டணியின் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விஜேயபால ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்படுவார்.

அதேபோல், கூட்டணியின் பொதுச்செயலாளர் தொடர்பாகவும் நாம் தீர்மானமொன்றுக்கு வரவேண்டியுள்ளது. இதற்காக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் நாம் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு இணங்க, பிரதமருக்குத்தான் அமைச்சரவையை நியமிக்க முடியும். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக சஜித் பிரேமதாசவும் வரவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச இருப்பதால், அவர்தான் பொதுத் தேர்தலில் கூட்டணியை வழிநடத்துவார். இதில், வேறு எவருக்கும் தலையிட உரிமைக்கிடையாது” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழு எடுத்துள்ள தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.