கூட்டணி அமைத்து வெற்றிபெறவேண்டிய எண்ணம் இல்லை – இழுபறி நிலையில் கூட்டணி

சுதந்திர கட்சியுடன் இணைந்தே தேர்தலில் வெற்றிபெறவேண்டிய எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மேலும் பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி, மற்றும் பிரதமர் களமிறக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிவகையில், “பரந்துப்பட்ட கூட்டணிமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றது. பேச்சுவார்த்தைகளில் சுதந்திர கட்சியினர் இணக்கமாக செயற்பட்டு பின்னர்பொது இடங்களிலும், ஊடகங்களிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் இவர்கள் முழு ஒத்துழைப்புடன் செயற்படவில்லை.இரு தலைவர்களின் அரசியல் நோக்கங்களையும் நிறைவேற்றவே நாம் கூட்டணி அமைப்பதற்கு ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்தோம்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளமை அண்மையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தெளிவுப்படுத்தியுள்ளது.

இவர்களின் முடிவு எவ்விதத்திலும் பொதுஜன பெரமுனவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. நாங்கள் சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணி அமைத்துத்தான் உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற தேவை எமக்கு கிடையாது” என தெரிவித்தார்.