குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்திக்கு உள்ளான புதிய அரசாங்கம் – சஜித்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மாத்திரம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான காலப்பகுதியில் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக அரசாங்கத்திற்காக வாக்களித்த பெருமளவான மக்கள் அதிருப்திகுள்ளாகியுள்ளனர் என மக்களிடையே காணப்படும் கருத்தாடல்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதனை பின் தள்ளிவைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேட்டையாடப்படுகின்றனர்.

மேலும், கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகள் பலவற்றை இரத்துச் செய்தும் மற்றும் குறித்த வேலை வாய்ப்புகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களை வேலைகளில் இருந்து வெளியேற்றியும் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.