குறுகிய காலத்தில் பெற்ற வெற்றி!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் ஐம்பத்தி இரண்டாயிரம் (52000) வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஓர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்வதிலும் யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கல், தமிழ் மக்களின் தொன்மைகளை அழிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளத் தவறிய காரணத்தினால் இவற்றையும் வினைத்திறனுடன் கையாளக் கூடிய புதிய தலைமை தேவை என்கிற கருத்து கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வந்தது.

இதன் விளைவாகவே இவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கான ஓர்மாற்றுத் தலைமையாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உதயமானது. நாம் எதிர்பார்த்த அனைவரும் இக்கூட்டணியில் இணைவதில் ஒத்துழைக்கா விட்டாலும் மேற்கண்ட பிரச்சினைகளை ஈடுபாட்டுடனும் வினைத்திறனுடனும் செயற்படுத்தக் கூடியவர்கள் என்போரை எம்மால் இயன்றவரை இணைத்து உருவாக்கினோம்.

இக்கூட்டணி உருவாகி ஆறு மாதங்களே ஆனபோதும் நடுவில் ஏறத்தாள மூன்றுமாதங்கள் கொரோனா தொற்றுக் காரணமாக இக்கட்சி மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்பட அவகாசம் கிடைக்கவில்லை.

எனவே மிக குறுகிய காலத்துக்குள்ளேயே எமது கட்சியின் கொள்கைகளையும் வேலைத் திட்டங்களையும், எமது கட்சியின் சின்னத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது. இத்தகைய பாதகமான சூழ்நிலைகள் மத்தியிலும் மக்கள் அளித்த அதரவு உற்சாகமளிப்பதாகும்.

60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது. எனினும் நாமும் எமது எதிர்காலசந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்குதொடர்ந்தும் நாம் போராட வேண்டி உள்ளது.

இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல.மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும்.

எனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும்.இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின்தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

இதன் ஓர் முக்கிய வடிவமாக எமது மக்கள் மத்தியில் இருக்கும் தமது ஒரு சில முகவர்களையும் அரசை சார்ந்து தம்மை வளர்த்துக் கொள்ள முனையும் சிலரையும் பதவிகள் அதிகாரங்களைக் கொடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றனர்.

இவர்களுடைய இந்த சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின் ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான ஒரு விடயமாகும். ஏறத்தாள 45ஆண்டுகளுக்குப் பின்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப்பெற்றுள்ளதுடன் அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளன.

தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுடன் அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதுடன் எமது போராட்டத்தை வலிமையுடன் சரியான திசை வழியில் எடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

மிகக் குறுகிய காலமே எமது கட்சி மக்கள் மத்தியில் செயற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளின் தொகையை நோக்குமிடத்து 52000 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்க கணிசமான தொகையாகும். ஆகவே எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் என்பது கட்சிக்கு வெளியில் இருக்கக் கூடிய ஈடுபாடும் செயற்திறனும் மிக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்களை இணைத்து வலிமையான ஓர் அணியை உருவாக்குவதும் அதனூடாக எமது கோரிக்கைகளை பொருத்தமான தளங்களில் முன்னெடுத்துச் செல்வதுமாகும்.

குறுகிய காலத்துக்குள்ளேயே எமது அணிக்கு இவ்வளவு வாக்குகளை அளித்து பிரதிநிதித்துவத்தை வழங்கிய வாக்காளர் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எமது வேலைத்திட்டங்களை செயற்படுத்த பலமூட்டும் வகையில் எதிர்வரும் காலங்களில் அனைவரும் செயற்படுவீர்கள் என நம்புகின்றோம்.