குமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி! தண்டிக்கப்படாததன் பின்னணி என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர்,

கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்த முறை எமக்கு நன்றாகத் தெரியும். இது சூழ்ச்சி மூலமாக இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து கைது செய்து அழைத்துவந்ததுபோல அர்ஜுன மகேந்திரனை அழைத்துவர முடியாது.

இப்போது கே.பிக்கு என்ன ஆனது? நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டரா? தண்டிக்கப்பட்டாரா? அவருக்கு சிறந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக அரசியல் ரீதியிலான டீல் ஆகும்.

எமது நாட்டுப் பிரஜை ஒருவர் எந்த அளவில் குற்றம் செய்திருந்தாலும் இந்தியா போன்ற வெளிநாடுகள் அவரைக் கேட்டால் வெறுமனே கொடுத்துவிடுவார்களா? இல்லை.

விடுதலைப் புலிகளின் பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசாங்கம் என்ன செய்தது என்று தெரியாது. அவருடைய சொத்துக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. இன்றும் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் சட்டரீதியாக மலேசியாவிலிருந்து அழைத்துவரப்படவில்லை என்றார்.