குடும்ப சமாதானத்தைப் பேணுவதன் ஊடாகப் பெண்களிற்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்

i3.phpயாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (08-12-2015) காலை -9-30 மணி முதல் நண்பகல் -12 மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு “குடும்ப சமாதானத்தைப் பேணுவதன் ஊடாகப் பெண்களிற்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் ” எனும் தொனிப் பொருளில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு வடமாகாண சபை முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வி.சுதர்சன் மேற்படி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் செயற்திட்டத்தின் சாராம்சத்தை நிகழ்வில் சமர்ப்பித்தார்.

இதன்போது மேற்படி நிறுவனத்தின் 16 நாள் செயற்திட்டத்துக்கு ஆக்க பூர்வமான ஒத்துழைப்புக்கள் வழங்கிய தெல்லிப்பழை பிரதேச செயலக உளவளத் துணையாளர் பொ.அருமைத்துரை, ஆசிரியர் எஸ்.றொபின்சன், யாழ்.மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் செல்வி.ந.உதயனி, யாழ்.பல்கலைக் கழக சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சரால் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பெண்கள் வன்முறைக்கெதிரான விழிப்புணர்வுப் பிரசுரம் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வுப் பிரசுரத்தை வடமாகாண முதலமைச்சர் யாழ்.மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் செல்வி.ந.உதயனியிடம் சம்பிரதாய பூர்வமாகக் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து கிராம மட்டத்தில் விழிப்புணர்வுச் செயற்திட்டங்களைச் செயற்படுத்திய ஊர்காவற்துறை நாரந்தனை, ஏழாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் தலைவர்கள் தமது அனுபவப் பகிர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி செல்வி-சுபாஷினி கிஷோர் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினர்.

குறித்த நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட விழிப்புணர்வுப் பிரசுரம் தொடர்ச்சியாக யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டப்படவுள்ளதுடன் ,பொதுமக்கள் மத்தியிலும் பிரசுரிக்கப்படவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா .செந்தில் நந்தனன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் செல்வி.ந.உதயனி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன், மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY