குடியரசுத் தலைவரிடம் பேரணியாக சென்று காங்கிரஸ் மனு; ‘சகிப்பின்மை’ விவகாரத்தில் மோடி மவுனம் காப்பதாக சோனியா சாடல்

Sonia_AP_2607689f_2607712fநாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர்

நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியை வழிநடத்திச் சென்ற சோனியா, பிறகு மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அதில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைத் தடுக்க குடியரசுத் தலைவர் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

“சமூக மற்றும் மத ரீதியான் பதற்ற சூழலை உருவாக்கும் கபட பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமூகத்தைத் துண்டாடும் குறிக்கோளுடனும் நல்லிணக்கத்தை தொந்தரவு செய்யும் விதமாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சகிப்பின்மை நிலை குறித்து பிரணாப் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றியை தெரிவித்தனர் காங்கிரஸார்.

பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, “குடியரசுத் தலைவர் சகிப்பின்மை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனம் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

தொடர்ச்சியாக அவரது அமைச்சரவை சகாக்கள் வெறுப்புப் பேச்சையும், சமூகப் பிளவையும் பரவலடையச் செய்யுமாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது பிரதமரின் மவுனத்தை விடவும் மோசமானது.

அச்சம், சகிப்பின்மை, ஆகிய சூழல்கள் வளர்ச்சியடைந்து வருவதன் மீதான கவலைகளை குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன் வைத்தது” என்றார் சோனியார்.

சுமார் 125 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY