குஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே ஜி.எஸ்.டி வரி குறைப்பு: சிவசேனா

குஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே, மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் இலாபம் மற்றும் விளம்பரம் பெறுவதில் பாரதீய ஜனதா கட்சி ஆகச்சிறந்த நிபுணத்துவம் பெற்றது என்றுசிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் 28 சதவீத வரிப் பட்டியலில் உள்ள 228 பொருட்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது 178 பொருட்களின் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. அனைத்து உணவு விடுதிகளுக்கும் ஒரே மாதிரியான வகையில் 5 சதவீதம் என ஜி.எஸ்.டி நிர்ணையிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைக்கப்பட்ட தருணத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா, ஏன் மத்திய அரசு தற்போது, பணிந்து செல்வதற்கு முடிவு எடுத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:- “ எந்த ஒரு விவகாரத்திலும் அரசியல் இலாபம் பெறுவதிலும் விளம்பரம் பெறுவதிலும் இவர்கள்( பாஜக) நிபுணத்துவம் பெற்றவர்கள். போராட்டங்களை புறந்தள்ளி, இந்த விவகாரத்தில்( ஜி.எஸ்.டி) சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது பணிந்துள்ளது. இதற்கான விடை குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது என்பதில் அடங்கியிருக்கிறது. குஜராத்தின் கிராமங்களுக்குள் பாஜக தலைவர்கள் செல்ல மக்கள் அனுமதி அளிக்கவில்லை. பாஜக தலைவர்களின் போஸ்டர்கள் அகற்றப்படுகின்றன. ஜி.எஸ்.டி பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. சாதரண மனிதனின் வரவு செலவு திட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஜி.எஸ்.டி உருவாக்கியுள்ளது.

பாரதீய ஜனதா ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய மந்திரிகள் என அனைவரும் நிர்வாகத்தை தள்ளாட விட்டுவிட்டு குஜராத் தேர்தலில் பிரச்சரம் செய்து வருகின்றனர். தேர்தலுக்காக பாஜக அரசு பெருமளவு பணத்தையும் செலவிட்டு வருகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY