கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநருர் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட வியாழேந்திரன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் குறித்து எம்மால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு தற்போது ஜனாதிபதி தீர்வை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களையும் உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்” என வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவருக்கும், ஆளுநர் திடீர் இடமாற்றம் வழங்கியதுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் ஆளுநரின் குறித்த செயற்பாட்டினால் தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.