கிழக்கில் இராணுவ தளம் அமைப்பதற்கான அவசியமில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளம் அமைப்பதற்கான அவசியம் இல்லை. இதனை அமெரிக்காவும் உறுதிபடுத்தியுள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படின் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் எச்சரித்தார்.

அத்துடன், இது தொடர்பாக முழுமையான தெளிவுபடுத்தல் அவசியம் என்றும் மன்றை கோரியிருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையே சிறந்த இருதரப்பு உறவு காணப்படுகிறது. நாம் சர்வதேச சட்டங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். இந்நிலையில், இலங்கையில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைப்பதற்கான எவ்வித விருப்பமும் இல்லை.

அதுவும் கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளம் அமைப்பதற்கான அவசியம் இல்லை. அவ்வாறானதொரு கருத்தை நாம் வெளியிடவில்லை. அமெரிக்க தூதரகமும் இதனை உறுதிபடுத்தியுள்ளது.

எனவே, இவ்வாறான விடயங்கள் குறித்து உரையாற்றுவதற்கு முன்னர் அது தொடர்பாக தெளிவடைய வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.