காஸா படுகொலை சம்பவம்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு, அமெரிக்காவே பொறுப்பு என துருக்கி குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காஸாமுனை எல்லை பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது கற்களை வீசியும், பாதுகாப்பு வேலியை தகர்த்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போராட்டம் வன்முறையாக மாறியதால் இஸ்ரேலிய ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ”காஸா படுகொலை சம்பவத்திற்கு இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து அமெரிக்காவும் பொறுப்பு ஏற்க வேண்டும். அமைதியை சீர் குலைக்கவும், வன்முறையை தூண்டி விடுவதற்காகவே கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றியுள்ளது. இந்த விவகாரத்தினால் காஸா எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள படுகொலை சம்பவத்திற்கு அமெரிக்காவே பொறுப்பு” என துருக்கி நாட்டின் துணை பிரதமர் பெகிர் போஸ்டேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக வன்முறை கலவரத்தை தூண்டி விடுவதற்காகவே அமெரிக்கா தனது தூதரகத்தை இடம் மாற்றுகிறது என அமெரிக்காவிற்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோஹன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் தொடர்ந்து தனது எதிர்ப்புகளையும், கண்டங்களையும் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY