காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்தில் நாளை முழு அடைப்பு : 1,000 இடங்களில் விவசாயிகள் மறியல்

Daily_News_8001476526261காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை கர்நாடகா திறந்து விட வலியுறுத்தகோரி தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 1,000 இடங்களில் சாலை மறியலும், 100 இடங்களில் ரயில் மறியலும் நடக்கிறது. தமிழகத்துக்கு கர்நாடக அரசு இந்த பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 3 மாதத்தில் 94 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். கடந்த மாதம் 26ம் தேதி வரை சுமார் 23 டிஎம்சி அளவுக்கே தண்ணீர் கொடுத்து உள்ளது. மீதமுள்ள 71 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசு பெற்று தந்தால் டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடியைத் தொடங்கி விடலாம். ஆனால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆகஸ்டில் திறந்துவிட வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு வரும் செப்டம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், ‘கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில மொத்தம் 51 டிஎம்சி மட்டுமே உள்ளது. இதனால் ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறந்துவிட வாய்ப்பில்லை. தமிழக வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்’ என அம்மாநில முடிவெடுத்தது. இது, தமிழக டெல்டா விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னையில் இருந்து ஒட்டுமொத்த தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும், சம்பா சாகுபடியை துவங்குவதற்கு கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை 30ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, விவசாயிகள் 1000 இடங்களில் சாலை மறியல், மாவட்ட தலைநகரங்கள் உள்பட 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். போராட்டத்துக்கு அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. எனவே முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY