காத்மாண்டுவில் விமான ஓடுதளம் தொடர்பாக குழப்பம் நேரிட்டதே விபத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பு

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து அந்நாட்டுக்கு சொந்தமான ‘யு.எஸ்.–பங்களா ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்று நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு புறப்பட்டது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.20 மணிக்கு அந்த விமானம் வந்தது.

விமானம் தரை இறங்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. விமான நிலைய வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து நொறுங்கியது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் அவர்கள் போராடி தீயை அணைத்தனர். அந்த விமானத்தில் 67 பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்தனர்.

ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் விமானத்தில் உள்ள பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டு, காட்மாண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்ததில் பலர் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராணுவ செய்தி தொடர்பாளர் கோகுல் பண்டாரி கூறும்போது, ‘‘இதுவரை நாங்கள் மொத்தம் 50 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். இன்னும் 8 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை’’ என்றார். 13 பேர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான விமானம் ‘பாம்பார்டியர்–8 கியூ 400’ வகையை சேர்ந்தது. தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். விமானம் விபத்துக்குள்ளானதால் அந்த விமான நிலையம் உடனே மூடப்பட்டது. அங்கு வரவேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

நேபாள விமான போக்குவரத்து ஆணைய டைரக்டர் ஜெனரல் சஞ்சீவ் கவுதம் கூறும்போது, ‘‘அந்த விமானம் ஓடுபாதையின் தெற்கு பகுதியில் இருந்து தரை இறங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் அது வடக்கு பகுதியில் இருந்து தரை இறங்கியது. விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்தது தெரிகிறது. வழக்கத்துக்கு மாறாக தரையிறங்கியதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

மலைகள் நிறைந்த நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சிறிய விமானங்கள் அந்நாட்டின் மலைப்பகுதி விமான தளங்களில் அவ்வப்போது சிக்கலில் மாட்டிக்கொள்ளும். பறவைகள் மோதி விபத்து நடைபெறுவதும் அங்கு அதிகம். 1992–ம் ஆண்டு பாங்காக்கில் இருந்துவந்த தாய்லாந்து விமானம் காட்மாண்டு விமான நிலையத்தில் தரை இறங்கும்போது விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.

காக்பிட்டில் குழப்பம்

இந்நிலையில் காத்மாண்டுவில் விமானத்தின் காக்பிட்டில் குழப்பம் நேரிட்டதே விபத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள் சிக்கிய விமானத்தை ஓட்டிய விமானிக்கும், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் விமான ஓடுதளம் தொடர்பாக குழப்பம் நேரிட்டு உள்ளது என்பதை காட்டுகிறது. விமானத்தில் விமான ஓட்டிகள் அறையில் குழப்பம் நேரிட்டதே விபத்திற்கு காரணமாக இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே அரசியல் ஸ்திரம் இல்லாத நிலையில் நீடிக்கும் நேபாளத்தில் விமான விபத்து சுற்றுலாத்துறைக்கு பாதிப்பாக அமையும் என பார்க்கப்படுகிறது.

விபத்திற்குள் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை எடுத்து நேபாள அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். விமான ஓட்டிக்கும் – கட்டுப்பாட்டு அறைக்கும் இடையான உரையாடலை ஆய்வு செய்கையில் ஓடுபாதை தொடர்பாக குழப்பம் நேரிட்டு உள்ளது என்பது தெரிகிறது என கூறப்பட்டு உள்ளது. உடையாடல் தொடர்பான பதிவுகளை பத்திரமாக வைத்து உள்ளோம் என விமான நிலையை மேலாளர் ராஜ்குமார் சேத்திரி கூறிஉள்ளார். ஓடுதளம் 02 (தெற்கு முடிவு) மற்றும் ஓடுதளம் 20 (வடக்கு முடிவு) தொடர்பாக குழப்பம் நேரிட்டதே விபத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY