காணி விடுவிப்பு சாத்தியமில்லை:மைத்திரி!

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான இலங்கை ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் எந்தவொரு பயனுமின்றி மீண்டும் கூடி கலைந்துள்ளது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் தலைமையில் படைத்தரப்புடன் மாவட்ட ரீதியாக பேச்சுக்கள் நடத்த மைத்திரிபா சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 6 தடவைகளா நடந்த கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களே இன்றும் பேசப்பட்டதுடன் கலைந்து சென்றுள்ளனர்.

வலி வடக்கு காங்கேசன்துறையில் 232 ஏக்கர் காணி அளவீடு செய்யப்படவுள்ளதையும், மானிப்பாய் காவல்நிலையத்திற்கு அளவீடு செய்யப்படவுள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்ட காங்கேசன்துறையில் அளவீடு செய்யப்படவுள்ள காணியில் முன்னர் பிரமாண்ட கடற்படை தளம் அமைந்திருந்ததாகவும், அந்த காணியையே அளவீடு செய்யவிருப்பதாகவும் கடற்படை மறுதலித்துள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கில் 24,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டது, இன்னும் ஒரு சில நூறு ஏக்கர்களே விடுவிக்க வேண்டியுள்ளதாக படைத்தரப்பு விளக்கமளித்துமுள்ளது.

ஆளுனருடன் பேசி முடிவெடுக்கும்வரை, காணிகள் அளவீட்டை நிறுத்த வேண்டுமென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கோரிக்கையினை தற்காலிகமாக மைத்திரி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளை பாதுகாப்பு அத்தியாவசியமுள்ள காணிகளை விடுவிக்க முடியாதென மைத்திரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே ஜனாதிபதி செயலணியென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நிராகரித்ததுடன் அதில் பங்கெடுக்கவேண்டாமென கூட்டமைப்பினரை கோரியிருந்தது தெரிந்ததே.