காணி முறைகேடு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

காணி முறைகேடு தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசிப்பவர்களின் காணிகளை வவுனியா பிரதேசசெயலாளர் கா.உதயராசா, குடியேற்ற உத்தியோகத்தர் பா.சுரேஸ், கிராம சேவகர் பொ.ஜெயபாலன் ஆகியவர்களினால் விற்பனை செய்யப்பட்டதாக கூறியே இவ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோரினை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.

இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சனவிடம் கேட்டபோது, “இச்சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனினால் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் இருவரிடமும் விசாரணை செய்யுமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற உடன் மாகாண காணி ஆணையாளர், வவுனியா மாவட்ட செயலாளரிடமும் இவ் முறைப்பாடு தொடர்பான அவசரமான அறிக்கை கோரலினையும், இவ்விடயம் தொடர்பாக எடுக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும் கோரியுள்ளதுடன் ஆளுனருக்கு வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் கேட்டுள்ளோம்.

மேலும் இவ்விடயத்தினை நாம் சிறிய விடயமாகவும் பார்க்கவில்லை. ஏனெனில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த காணி என கூறப்பட்டுள்ளமையால் இது ஒரு முக்கியமான பிரச்சனையாகவே பார்க்கின்றோம்.

அதன் அடிப்படையில் 14.10.2019 அன்று ஆணைக்குழு முன்னிலையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்டச்செயலாளர் ஆகியோரினை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.