காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கையெழுத்துப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில், வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனக் கோரிக் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணன் ராஜ்குமார் இதனைக்
கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெப்ரவரி மாதம் எமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நாளில் எமது கையெழுத்துச் சேகரிப்பை ஆரம்பிக்கவுள்ளோம்.

காணாமல்போன பிள்ளைகளைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு அமெரிக்கா மட்டுமே காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கச் சிறந்த அறிவாற்றல் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது; சிறந்த உபகரணங்களைக் கொண்டுள்ளது; பல கஷ்டமான இடங்களை அடைவதற்குப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உலகத் தலைவர்கள். அவர்களை நாம் கேட்டுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் இங்கே வருவார்கள்.

அவர்கள் உலகில் மிகசக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் அசையாது மட்டுமல்ல ஒன்றுமே நடக்காது. அவர்கள் மனித உரிமை ஆதரவாளர்கள்.

இதேவேளை, வடக்கில் இன்று எமது பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளோம். சிங்கள அரசால் அழிக்கப்படுகின்றோம்.

கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களாக மாற்றப்படுகிறார்கள். சிங்களக் குடியேற்றங்கள் நடந்து வருகின்றன.

சிங்கள, புத்த அடையாளங்கள் தமிழர் தாயகத்தில் பரவி வருகின்றன. எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பணம் மற்றும் சலுகைகளுக்கு விலைபோயுள்ளனர்” – என்றார்.