காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள்! – சட்டமா அதிபர் தரப்பு ஆட்சேபனை, அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்

நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான, பிரதி சொலிசிற்றர் ஜெனரல், இந்த மனுக்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

“ இந்த மனுக்கள் காலம் கடந்தவை. சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது 1996ஆம் ஆண்டாகும். 22 ஆண்டுகள் கடந்த சம்பவத்தை இந்த நீதிமன்றில் விசாரிக்க முடியாது.எனவே ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்” என இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல், சைத்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார்.

அத்துடன், வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, மேலும் 7 காரணங்களை குறிப்பிட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.

அதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ள தமது உறவுகள் தற்போதும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதனை நம்புகின்றார்கள்” என தெரிவித்தனர்.

அப்போது, “நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை உறுதியாக கூற முடியும். அவ்வாறு எவரேனும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டமைக்கு எதிராக இந்த நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பேன்” என குணசேகர தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆட்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. 9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.

மனுக்களில் 1ஆம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றினார். அவர்களுடன் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த்தும் முன்னிலையாகினர்.மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், எஸ்.சுபாசினி ஆகியோர் முன்னிலையாகினர்.

அதேவேளை, யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர். இன்று நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

அச்சத்துக்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர். பின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி, யாழ்.பொலிஸ் தலைமையகத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர்.

இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள். மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது, “அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை” என கூறி சென்றனர்.

LEAVE A REPLY