காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது.

ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியது இன்றைய அரசின் தார்மீகக் கடமை.

இந்தப் பொறுப்பிலிருந்து விலக அரசுக்கு இம்மியளவும் இடமளிக்கக் கூடாது. இதனைச்செயற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் உழைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது.

இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆதரவாளனும் கடையடைப்பு போராட்டம் முழுமையான வெற்றிபெற தங்கள் செயற்பாட்டு ரீதியான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.