கஷோகி கொலை விவகாரம் : விமர்சனத்தை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை

பத்திரிக்கையாளர் கஷோகி கொலை தொடர்பாக இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விமர்சிப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கஷோகி கொலையில் சவூதி மன்னர் மற்றும் இளவரசரின் மான்பை குறைக்கும் எந்த விவாதத்தையும் சகித்துக்கொள்ள முடியாது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அட்டல் அல்ஜுபர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்கள் முன் உரையாற்றிய அதிபர் டொனால்டு டிரம்ப் சவூதி அரேபியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எதிர்பாராத சரிவை சந்திக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கஷோகி கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்களை சிஐஏ திரட்டி வைத்திருந்தாலும் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே கஷோகி கொலைக்கு பின்னர் அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச உறவை பலப்படுத்தும் நடவடிக்கையை சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கியிருக்கிறார். அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் சென்றுள்ளார்.