கல்வித் தகைமை அடிப்படையில் தேர்தலின் பின்பு அடுத்தக்கட்ட வேலைவாய்ப்பு – டக்ளஸ்

க.பொ.த.சாதாரண தரத்திற்குக் கீழுள்ள கல்வித் தகமையைக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் மாதம் அளவில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேல் கல்வித் தகமைகளைக் கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க நாடாளுமன்றத் தேர்தலின் பின்பே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தற்போது க.பொ.த.சாதாரண தரத்திற்குக் கீழ் கல்வித் தகமையைக் கொண்டவர்களுக்கே எதிர்வரும் மாதம் அளவில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான பதிவுகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மேலும் க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேலுள்ள கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்பே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எனவே யாரும் தற்போது நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேலுள்ள கல்வித் தகமைகளைக் கொண்டவர்கள் உங்களின் கோரிக்கைக் கடிதத்துடன் சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பின்போது வேலை வாய்ப்பு, மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சுய தொழில் மேற்கொள்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.