கலைக்கப்படவுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றம்? கோட்டாபயவின் கரங்களுக்கு வருகிறது அதிகாரம்

நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்களை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியுடன் நாடாளுமன்றத்தினை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் கைகளுக்குக் கிட்டுகிறது.

இந்நிலையில், மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த தேர்தலுக்கு செல்வது தொடர்பிலான உத்தியோகப்பூர்வமான முடிவு நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான விடயம் அறிவிக்கப்படும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் இடம்பெறும். இதுதான் இந்தப் நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தையடுத்து, மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்பிரல் மாதமளவில் பொதுத்தேர்தலுக்கு செல்ல உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.