கர்நாடக பாராளுமன்ற இடைத்தேர்தல் – இரு தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி

கர்நாடகம் மாநிலத்தில் காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா, 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா தோல்வியை தழுவினார்.

மற்ற இரு தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாத்தில் தன்னை எதிர்த்து நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ஜே.எஸ். சாந்தா என்பவரை தோற்கடித்தார்.

மன்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட எல்.ஆர்.ஷிவராமேகவுடா தன்னை எதிர்த்து நின்ற பா.ஜ.க. வேட்பாளர் சித்தராமையாவை விட 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இரு தொகுதிகளின் வெற்றியும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.