“கருப்பு ஜனவரி” என்ற பெயரில் தலைநகர் கொழும்பில் போராட்டம்!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் “கருப்பு ஜனவரி” என்ற பெயரில் தலைநகர் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

ஊடகவியலாளர்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட இப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.

குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதில் கலந்து கொண்டிருந்தவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தியும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர்களின் பதாதைகளை ஏந்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் 17 செய்தியாளர்களும், ஊடகத் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் பட்டியலிடுகின்றன. ஆனாலும் இது தொடர்பாக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பிரகீத் ஏக்நலிகொட என்னவானார் என்பதும் இன்னமும் தெரியவில்லை. மேலும் பத்திரிக்கையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் தமக்கு சம்மந்தம் கிடையாது என்று கூறும் அரசு, முன்பு நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணைகள் தொடர்வதாகக் கூறுகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.