கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்கள்- கஜேந்திரன்

கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவினையும் எடுக்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோப்பாவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அவர்களின் உறவினர்கள் வீதிகளில் கண்ணீருடன் அலைந்து வருகின்றனர். அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.

இதேவேளை, நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி எந்த அரசாங்கத்தினையும் ஆதரிக்கவோ, எந்தவொரு சர்வதேச சக்திகளின் தேவைக்காவும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை எந்த அரசுக்கும் வழங்கப்போவதோ கிடையாது.

அத்துடன், எமது பகுதிகளைத் திட்டமிட்டு புறக்கணித்து எமது மக்களை பொருளாதார ரீதியாக அழிக்க முற்படுகின்றபோது அந்த அரசாங்கத்தின் முகவர்களாகச் செயற்படுகின்ற வியாழேந்திரன், கருணா, பிள்ளையான் ஆகியோரால் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் இந்த அரசாங்கத்தின் முகவர்களாவார்கள். அவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுகின்றவர்களே தவிர அவர்களினால் முடிவுகளை எடுக்கமுடியாது. நிமிர்ந்து நின்று அரசாங்கத்துடன் அவர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் சொல்லமுடியாது. இவர்களுடன் செல்வதனால் எந்த மாற்றத்தினையும் மக்கள் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

அடுத்ததாக சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்துதான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் சமஷ்டியை உருவாக்குவதற்கான அழுத்தத்தினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஓரு தீர்வுத்திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் விக்னேஸ்வரனோ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர் என தன்னைக் காட்டிக்கொண்டு பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி தயாரித்த தீர்வினை உரிய காலத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டிய நிலையில் அதனைக்கொண்டு சென்று கொடுப்பதற்கே அவர் மறுத்திருந்தார். தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன் குழப்பியடித்தார்.

எனவே, விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் விக்னேஷ்வரனுக்குப் பின்னால் செல்லவைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகின்றார்” என்று குறிப்பிட்டார்.