கருணாநிதி இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தன்னுடைய 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட உள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்கள் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இன்று காலை புத்தாடை அணிந்து, பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரிடம், அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து பெறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கருணாநிதிக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பழ.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்பட பலர் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழக அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி, உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பா.ஜ.க. சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY