கதாநாயகிகள் எதையெல்லாம் பார்த்து பயப்படுகிறார்கள்?

சினிமாவில் பேயாகவும் வில்லியாகவும் வாள் வீசி அதிரடி சண்டை போடும் மகாராணி வேடங்களிலும் நடிக்கும் கதாநாயகிகள் நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து பயப்படுகிறார்கள்.

நடிகை காஜல் அகர்வால் தன்னை பயமுறுத்துவது எது என்று சொல்கிறார்:-

“பெண்களை கிளி, அன்னத்துக்கு ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் எனக்கு பறவைகளை பார்த்தால் பயம். சிறுவயதில் தோழிகள் வீட்டுக்கு போகும்போது அவர்கள் வளர்க்கும் கிளி, புறாக்களை பார்த்து பயப்படுவேன். பறந்து வந்து என் கண்களை கொத்தி விடுமோ, கைகளை கொத்தி விடுமோ என்று அச்சம் வரும். இதனால் அவற்றின் பக்கத்தில் போகாமல் தள்ளியே நின்று விடுவேன்.

கூண்டில் அடைத்து வைத்து இருந்தாலும் அருகில் செல்ல மாட்டேன். இப்போது வளர்ந்த பிறகும் பறவைகள் பயம் என்னை விட்டுப்போகவில்லை. மாரி படத்தில் தனுசுடன் நடித்த போது ஒரு புறாவை எடுத்து என் கையில் வைத்துக்கொள்ளும்படி டைரக்டர் கூறினார். எனக்கு பயத்தில் அழுகையே வந்தது. பறவைகளை பார்த்தால் எனக்கு கை, கால் உதறும் என்று அவரிடம் சொன்னேன். தனுஷ் எனக்கு தைரியம் சொல்லி, ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்து முடித்தேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:-

“நிறைய பேர் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படுவார்கள். எனக்கு பல்லி, பாம்பு என்றால் பயம். வீட்டில் பல்லியை பார்த்து விட்டால் அதை விரட்டி வெளியே அனுப்பும் வரை ஓயமாட்டேன். பல்லி வெளியே போய் விட்டது என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் நிம்மதியாவேன். பாம்பு இருக்கும் பக்கத்திலேயே போக மாட்டேன். அவற்றை அடைத்து வைத்து இருந்தால் தள்ளி நின்று எட்டிப்பார்ப்பேன்.

இந்தியில் அக்‌ஷய்குமாருடன் கப்பார் படத்தில் நடித்தபோது எனக்குள்ள பாம்பு பயத்தை போக்க அவர் முயற்சித்தார். ஒரு பாம்பை எடுத்து கையிலும் வைத்தார். நான் கத்தி அலறியபடி ஓடி விட்டேன். அதை தொடக்கூட இல்லை. தூங்கும்போது பாம்புகளுடன் நடிப்பது மாதிரி கெட்ட கனவுகள் வரும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“எனக்கு ஒரு விசித்திரமான பயம் இருக்கிறது. நான் நீச்சல் கற்று இருக்கிறேன். ஆனாலும் கடலில் படகிலோ கப்பலிலோ பயணம் செய்யும்போது பயத்தில் உயிரை கையில் பிடித்துக்கொள்வேன். விமானம் உயரே ஏறும்போதும் கீழே இறங்கும்போதும் பயத்தில் கண்களை மூடிக்கொள்வேன். உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது கீழே விழுந்து விடுமோ என்ற நினைப்பில் அச்சப்படுவேன். பலமாடி கட்டிடத்தின் உச்சியில் நீச்சல் குளம் கட்டி இருப்பார்கள். அதில் குளிக்கும்போதும் ஏதோ ஆகி விடுமோ என்ற பயம் வரும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை டாப்சி கூறியதாவது:- “சிறு வயதில் இருந்தே டெலிவிஷன்களில் திகில் படங்கள் பார்த்து எனக்கு பேய் நம்பிக்கை வந்து விட்டது. இதனால் இருட்டை பார்த்து பயப்படுவேன். படுக்கை அறையில் தனியாக படுத்தால் ஏதோ தூக்கிக்கொண்டு போய்விடும் என்று பயப்படுவேன். அம்மா அல்லது தங்கையை பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டுதான் தூங்குவேன். வளர்ந்த பிறகும் அந்த பயம் போகவில்லை.”இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY