கட்சியின் தலைமைக்கு நானே தகுதியானவன்: ரணிலுக்கு சவால் விடுக்கும் நவீன் திஸாநாயக்க

கடந்த 26 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வரும் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அந்த தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தேவையான தகுதி தன்னிடம் இருப்பதாக நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் திம்புல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் நேரடியாக பேசி வேலைகளை செய்யும் அரசியல்வாதி. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் உயர் மட்டத்தில் இருக்கின்றேன் என நினைக்கின்றேன்.

எனக்கு கட்சியின் தலைவராக முடியும் என எண்ணுகிறேன். நான் கட்சியின் தலைவராக தெரிவாகி நாட்டின் உயர் பதவிகளுக்கு செல்வேன். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு செல்வேன். அப்படி சென்றாலும் நான் 20 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கே முதலில் வேலை செய்வேன்.

ஐக்கிய தேசியக் கட்சியில் நான் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கின்றேன். முதலாவது இடத்திற்கு செல்ல சிறிய உந்துதலை கொடுக்க நான் இளம் தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளேன். அவர்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் மூன்றாண்டுகள் இணைந்திருந்தேன். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பி வந்து தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன். ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது. இது உயிர்ப்புடன் இருக்கும் கட்சி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னம், நாற்காலியாகவும் வெற்றிலையாகும்,தற்போது தாமரை மொட்டாகவும் மாறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் அப்படியல்ல தொடர்ந்தும் யானைச் சின்னமே இருந்து வருகிறது. யானைச் சின்னத்தில் இருந்து தொலைபேசிக்கு சென்றால், யானை முடிந்து விடும். அதற்கு இடமளிக்க முடியாது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும் மாற்றம் தேவை. ஒருவர் 26 ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.