கடைசி போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வே சாதனை

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மண்ணில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று தொடரில் 2-2 என சமநிலையில் இருந்தது.

தொடரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்தோடாவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரிமர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த டிக்வெல்லா 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மெண்டிஸ் 1 ரன்னிலும், தரங்கா 6 ரன்னிலும், கேப்டன் மேத்யூஸ் 24 ரன்னிலும் வெளியேறினார்கள்.

இதனால் இலங்கை அணி 78 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு குணதிலகா உடன் குணரத்னே ஜோடி சேர்ந்தார். குணதிலகா 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவர் வெளியேறியதும் அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கையின் ரன்வேகம் அடிபாதளத்திற்குள் இறங்கியது.

குணரத்னே உடன் சமீரா இணைந்து கடைசி வரை விளையாடினார். ஆனால் ஜிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முழுவதும் விளையாடியும் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குணரத்னே 59 ரன்னுடனும், சமீரா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ரசா 3 விக்கெட்டும், கிரிமர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மட்டுமல்லாமல், தொடரையும் கைப்பற்றி சரித்திர சாதனைப்படைக்கும் நோக்கத்தில் ஜிம்பாப்வேயின் மசகட்சா, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் மலிங்கா, குலசேகரா, சமீரா ஆகியோரின் வேகப்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார்கள். இந்த ஜோடி 14.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தது. மிர் 32 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் சேர்த்ததால் ஜிம்பாப்வே அணிக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்பட்டது.

3-வது விக்கெட்டுக்கு மசகட்சாவுடன் முசகண்டா ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த மசகட்சா 86 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 73 ரன்களும், முசண்டா 49 பந்தில் 37 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த எர்வின், வில்லியம்ஸ் தலா இரண்டு ரன்களில் அவுட்டாக ஜிம்பாப்வே அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 6-வது வீரராக களம் இறங்கிய சிகந்தர் ரசா, கேப்டன் கிரிமர் உடன் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

39-வது ஓவரின் முதல் பந்தை சிகந்தர் ரசா சிக்கருக்கு தூக்கி, ஜிம்பாப்வே அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றதுடன், தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைக்க முக்கிய காரணமாக இருந்தார்.

ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிகந்தர் ரசா 27 ரன்னுடனும், கிரிமர் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கை மண்ணில் முதல் வெற்றியை ருசித்த ஜிம்பாப்வே, தொடரையும் கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்துள்ளது

LEAVE A REPLY