கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள், கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வட.மாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாதுகாப்பு காரணமாக படையினரால் கையகப்படுத்தப்பட்ட சிலாவத்துறை காணிகளை விடுவித்து மக்களை குடியேற்றுவதில் ஜனாதிபதியாகிய உங்களது கரிசனை அவசரமாக தேவைப் படுகின்றது.

சிலாவத்துறையில் மக்களுக்கு சொந்தமான 42 ஏக்கரில் 06 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் எஞ்சியுள்ள 36 ஏக்கர் காணிகளை மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறே, மன்னார் மாவட்டத்தின் கிறிஸ்தவ பூர்வீக கிராமமான முள்ளிக்குள மக்களும் இவ்வாறன கஷ்ட நிலை ஒன்றுக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 1200 ஏக்கர் காணிகளில் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர்.

இந்த காணியில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன ஏற்கனவே உறுதியளித்திருந்த போதும், 23 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன.

யுத்த முடிவின் பின்னர் இந்த பிரதேசங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்தக் காரியங்களும் இடம்பெறவில்லை.

எனவே சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி மக்களின் வாழ்வில் விடியலேற்ற வேண்டும்.

அதேபோன்று கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்த முள்ளிக்குள மக்களின் பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அத்துடன் வில்பத்து வன பாதுகாப்பு என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.