கடம்பன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு படம் : கேத்ரின் தெரஸா

மெட்ராஸ் படத்தில் கலையரசி என்ற வேடத்தில் நடித்தவர் கேத்ரின் தெரஸா. அதன்பிறகு கணிதன், கதகளி போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ஆர்யாவுடன் கடம்பன் படத்தில் நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட கதையில் இந்த படம் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மேலும், இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் கேத்ரின்.

இந்த படம் குறித்து அவர் கூறுகையில், கடம்பன் படம் பழங்குடியின மக்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால், மெட்ராஸ் படத்திற்காக எப்படி குடிசை மாற்று வாரிய பெண்ணாக மாறினேனோ, அதேபோல் பழங்குடியின பெண்ணாக இந்த படத்திற்காக முழுமையாக மாறினேன். பார்ப்பது, பேசுவது, நடப்பது என ஒவ்வொன்றிலுமே முழுமையாக என்னை மாற்றி மலைவாழ் பெண்ணாகவே நடித்திருக்கிறேன்.

முக்கியமாக, பாங்காங் நாட்டு காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது கொசுக்கள், வண்டுகள் என கடித்து உடம்பை காயப்படுத்தியிருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக யானைக்கூட்டம். கடம்பனில் மொத்தம் 75 யானைகள் வரை நடித்துள்ளன. இந்திய யானைகளை விடவும் பெரிய அளவிலான யானைகள் என்பதால் யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பயத்துடனேயே நடித்தேன். பழக்கப்பட்ட யானைகள் தான் என்றாலும் அவற்றை நெருங்கவே பயமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு காட்சியில் நடித்தபோதும் மனதுக்குள் பிரேயர் பண்ணிக்கொண்டேன். அந்த வகையில், இந்த படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் போன்று ஸ்பாட்டில் எங்கு பார்த்தாலும் யானைகளாக நின்றன. இப்படி ஒரே இடத்தில் 75 யானைகளை பார்த்த அனுபவத்தை என்னால் வாழ் நாளில் மறக்கவே முடியாது என்கிறார் கேத்ரின் தெரசா.

LEAVE A REPLY